Wednesday, August 4, 2010



எந்திரன் - பாடல்கள் விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த எந்திரன் படப் பாடல்கள் கடந்த சனிக்கிழமையன்று வெளியாகியது. அன்றே இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து பாடல்களை கேட்டுவிட்டேன். பொதுவாக ரகுமான் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும் என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால் இப்படத்தில் பெரும்பாலான பாடல்கள் முதல் தடவையே பிடித்துவிட்டது.


இதோ எனது பார்வையில் எந்திரன் பாடல்கள்.

புதிய மனிதா - S.P. பாலசுப்ரமணியம், A.R. ரகுமான், கதீஜா ரகுமான்

இசைத் தகடில் முதல் பாடல், படத்திலும் இதுவே முதல் பாடலாக இருக்குமென்று நினைக்கிறேன். ரகுமான் குரலில் மெதுவாக ஆரம்பிக்கும் பாடல்,எஸ்பிபி பாட ஆரம்பித்தும் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. பின்னணி இசையும் மிகவும் துள்ளலாக அமைந்திருக்கிறது. வைரமுத்துவின் வரிகளும் அருமை, எடுத்துக்காட்டாக "கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும், அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை". ரஜினி - எஸ்பிபி ஹிட் பாடல் வரிசையில் இந்த பாடலுக்கும் ஒரு இடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

காதல் அணுக்கள் - விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்

முதல் தடவை கேட்கும் போது பிடிக்கவில்லையென்றாலும், கேட்க கேட்க பிடிக்க ஆரம்பத்து விட்டது. இதன் பாடலசிரியரும் வைரமுத்துவே. இடையிடையே வரும் பின்னணி இசை சில ரகுமானுடைய பழைய பாடல்களை நினைவு படுத்தினாலும் மொத்தத்தில் ரசிக்க முடிகிறது.

இரும்பிலே ஒரு இருதயம் - A.R ரகுமான், காஷ் '' கிரிஸ்ஸி

துள்ளலான மேற்கத்திய இசையுடன் ஆரம்பிக்கிறது பாடல். பின் எந்திரனின் காதலைப் பற்றி ரகுமான் பாடுகிறார். பெண் குரல் வித்தியாசமான ஆனால் பாடலுக்கேற்ற குரல். பாடல் கடைசியில் பெண் குரலில் பாடும் போது வரும் மெட்டு ஏதோ ஆங்கில பாடலை நினைவு படுத்துவது போலுள்ளது. வைரமுத்துவின் மகன் கார்கி இப்பாடலை எழுதியுள்ளார்.

சிட்டி டான்ஸ் ஷோகேஸ் - பிரதீப் விஜய், பிரவின் மணி, யோகி பி

மேற்கத்திய இசையும் இந்திய இசையும் கலந்த பாடல். பாடல் தலைப்பை கேட்டால் எந்திர மனிதனின் ஆடலுக்கேற்ற பாடல் போலுள்ளது. ஆனால் பாடலில் வரும் இசை படத்தின் டைட்டிலின் போது வரும் இசை போலிருக்கிறது. படம் வெளிவரும்போதுதான் தெரியும் எதற்கான பாடலென்று.

அரிமா அரிமா - ஹரிஹரன், சாதனா சர்க்கம், பென்னி தயாள், நரேஷ் ஐயர்

இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். எந்திர மனிதனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையேயான டூயட் பாடல். அரசர்கள் நடக்கும் போது வரும் பின்னணி இசை போலுள்ள பாடல் ஆரம்ப இசை அருமை. அதுதான் இப்போது எனது மொபைலின் ரிங்டோன். ஹரிஹரன் தனது குரலை மாற்றிப் பாடியிருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாடகர் பாடிய பாடல் என்பதால் என்னவோ, மேலும் மேலும் கேட்க கேட்கத் தூண்டுகிறது :) இதன் பாடலாசிரியரும் வைரமுத்துவே.

கிளிமஞ்சாரோ கிளிமஞ்சாரோ - ஜாவித் அலி, சின்மயி

பழங்குடிகளின் இசையில் வரும் துள்ளலான பாடல். பாடல் அருமையாக இருக்கிறது ஆனால் எங்கோ கேட்டது போன்ற உணர்வு வருகிறது. பா.விஜய் இப்பாடலை எழுதியிருக்கிறார்.

பூம் பூம் ரோபோடா - யோகி பி, கீர்த்தி சகதியா, ஸ்வேதா மோகன், தன்வி ஷா

இதுவும் எந்திர மனிதனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையேயான டூயட் பாடல். இப்பாடலும் கேட்டவுடன் பிடித்து விடுகிறது. ஆனால் ஒரு இடத்தில் யோகி பி பாடும் வரிகள் அவரின் முந்தைய பாடல்களில் வருவது போன்றே உள்ளது. இப்பாடலை எழுதியவர் கார்கி.

********************

மொத்தத்தில் எந்திரன் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை என்றே நினைக்கிறேன்.




1 comment:

பழூர் கார்த்தி said...

ஆமாங்க.. பாட்டெல்லாம் முதல்ல கேட்க சுமாராத்தான் இருந்தது... ஆனா போகப் போக சூப்பரா புடிச்சுடுச்சு :-)))

Post a Comment