Sunday, August 22, 2010



சென்னையிலிருந்து மதுரை - வழி: தாம்பரம்

தலைப்பை பார்த்ததும் ரொம்ப குழம்ப வேணாம், வித்தியாசமா இருக்கட்டும்னுதான் அப்படி வச்சிருக்கேன் (இதெல்லாம் வித்தியாசமானு நீங்க கேக்குறது தெரியுது..என்ன பண்றதுங்க நம்ம தலைப்பை நாமே பாராட்டலனா எப்படி..:) ) பதிவை படிச்சு முடிச்சதும் தலைப்பு சரியாத்தான் வச்சிருக்கேனு கூட உங்களுக்கு தோணலாம். சரி விஷயத்துக்கு வருவோம். ஒண்ணுமில்லீங்க, போன வாரம் சென்னையில இருந்து மதுரைக்கு போறப்ப ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம்தான் இந்த பதிவு..

நம்ம ப்ரொஃபைல பாத்தாலே தெரிஞ்சிருக்கும் நமக்கு சொந்த ஊரு மதுரைனு (ப்ளாக்குக்கு வர்றதே பெரிய விஷயம், இதுல ப்ரொஃபைல வேற பாக்கனுமா). எப்பவும் சனி, ஞாயிறு லீவுங்கறதால மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் ஊருப்பக்கம் போயி தலைய காமிச்சிட்டு வர்றது வழக்கம். போறதப் பத்தி ரொம்ப நாளு முன்னாடியே ப்ளான் பண்ணிட்டேனா ட்ரெயின்லயோ பஸ்லயோ புக் பண்ணிடுவேன். அப்படி இல்லனா கோயம்பேடு போயி எந்த அரசு வண்டி இருக்குதோ (3X2 இருக்கை வண்டி உட்பட) அதுல ஏறி போயிகிட்டே இருப்பேன்.

போன வாரம் வெள்ளிக்கிழமை மதுரை போறதுக்கு டிக்கெட் எதுவும் புக் பண்ணல, அதனால வழக்கம் போல கோயம்பேடு போயிட்டேன். அப்போது மணி இரவு 9. கூட்டம் அதிகமா இல்லனாலும் மதுரை போற எந்த AC/UD வண்டிலயும் சீட் இல்ல. சரி 3X2 வண்டி ஏதாவது இருக்குதானு போயிப் பாத்தா, ஒன்னு இருந்துச்சு..ஆனா அதுல பின்னாடி இருக்குற ரெண்டு வரிசைலதான் சீட் இருந்துச்சு. சரி எப்படியும் 3X2லதான் போகப் போறோம், கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பஸ்ல முன்னாடியோ, நடுவுலயோ உக்காந்து போகலாம்னு நின்னுகிட்டு இருந்தேன். அடுத்து கொஞ்ச நேரத்துல, ஒரு UD வண்டி வந்துச்சு..அதுவும் முன்பதிவு பண்ணாதவங்களுக்காக அந்த வண்டி..அடிச்சி புடிச்சி ஒரு வழியா உள்ள போயி ஒரு சீட்டையும் புடிச்சிட்டேன்.

ஒரு வழியா செட்டிலாகி பஸ்ஸ நோட்டம் விட்டேன். சீட் கவரெல்லாம் கொஞ்சம் அழுக்கா இருக்கு, வண்டி வேற ரொம்ப அடி வாங்குன மாதிரி இருந்துச்சு. அப்பவே ஒரு சந்தேகம் வந்துச்சு இந்த வண்டி சீக்கிரம் மதுரை போயி சேருமானு. 3X2லனா டிக்கெட் 200 ரூபா, இதுல 250க்கு புஷ்பேக்கோட இருக்கே, அதனால இதுலயே போயிடலாம்னு முடிவு பண்ணேன். எல்லா சீட்டுக்கும் ஆள் வந்ததும், வண்டிய 9.30 மணிக்கு எடுத்தாய்ங்க. அங்கங்க மெட்ரோ ரயில் வேலை வேற நடக்குறதுனால தாம்பரம் போறதுக்கே 11 மணி ஆயிடுச்சு. தாம்பரம் போனதுக்கப்புறம் வண்டி ரொம்ப மெதுவாவே போயிகிட்டு இருந்துச்சு. டிக்கெட் ஏத்துறதுக்காகத்தான் அப்படி போறாய்ங்க போலனு நினைச்சேன். பாத்தா திடீர்னு வண்டிய ஓரங்கட்டிடானுங்க. பத்து நிமிஷமா வண்டி நகரவே இல்ல.

என்னாச்சுனு பாக்க ரெண்டு பேரு எந்திரிச்சி போனா, வண்டி முன்னால டிரைவரையும் கண்டக்டரையும் காணோம். சரினு கீழ இறங்கி தேடுனா, அவுங்க ரெண்டு பேரும் பக்கத்துல இருந்த விழுப்புரம் கோட்டம் பஸ் ஆபிஸ்ல இருந்துருக்காய்ங்க. என்னாச்சுனு கேட்டதுக்கு ப்ரேக்ல ஏர் லாக் ஆயிடுச்சு, அதுனால வண்டி போகாதுனு சொல்லிருக்காங்க (அந்த வண்டி அப்பதான் சர்வீஸ் போயிட்டு வந்துச்சாம்..சர்வீஸ் போயிட்டு வந்த வண்டியே இப்படியா?!?!). அடுத்து என்ன பண்ண போறீங்கனு கேட்டதுக்கு ஸ்பேர் பஸ்க்கு சொல்லிருக்கோம் இன்னும் அரை மணி நேரத்துல வண்டி வந்துடும்னு கண்டக்டர் சொன்னாரு. இந்த வண்டி வர்றதுக்கே 1 1/2 மணி நேரம் ஆயிருக்கே, அந்த வண்டி மட்டும் எப்படி அரை மணி நேரத்துல வரும்னு கேட்டதுக்கு, அந்த வண்டி ஏற்கனவே கிளம்பிடுச்சு இப்ப டிராபிக் அவ்வளவா இருக்காதுங்கிறதுனால அரை மணி நேரத்துல வந்துடும்னு சொல்லிருக்காரு. அப்போ மணி இரவு 11.30 மணி.

12.15 வரை பாத்தோம், வண்டி வரவே இல்ல. அரை மணி நேரத்துல வண்டி வரும்னு சொன்னீங்களே, முக்கா மணி நேரமாச்சு இன்னும் வண்டி வரல. ரொம்ப லேட் ஆயிடுச்சி, ஒன்னு பணத்த திருப்பி குடுங்க இல்லனா வேற வண்டில ஏத்தி விடுங்கனு கண்டக்டர்ட்ட கேட்டோம். அதுக்கு அவரு, "ஸ்பேர் வண்டி கிளம்பி வந்துகிட்டு இருக்கு, அதனால பணத்த திரும்ப தர முடியாது, இன்னும் பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க வண்டி வந்துடும்"னு சொன்னாரு. அங்க இருக்குற எல்லாத்துக்கும் இது சரிப்பட்டு வரும்னு தோணல, அதனால ரோட்டுல வர்ற வண்டிய எல்லாம் மறிக்கலாம்னு முடிவு பண்ணோம்.

எல்லோரும் போயி ரோட்டுல நின்னோம், நான் முத வரிசையில நடுவுல நிக்கிறேன். அப்ப ஒரு பஸ் வருது, ஆனா அது நிக்கிற மாதிரி தெரியல. இத்தன பேரு ரோட்ட மறிச்சி நிக்கிறோமே, நிறுத்தாமலா போயிடுவானு நம்பி நின்னேன். பஸ் கிட்ட வந்துகிட்டே இருக்கு ஆனா நிக்கிற மாதிரி தெரியல. திடீர்னு ஒருத்தன் என் கையப் பிடிச்சி இழுக்குறான். என்னனு பாத்தா அப்பதான் தெரியுது பஸ் நிக்காம வந்தத பாத்து எல்லாரும் விலகி போயிட்டாய்ங்க, நான் மட்டும் தனியா நின்னுருக்கேனு..(ஆஹா மதுரைக்குப் போக வேண்டியவன மேல அனுப்பத் தெரிஞ்சாய்ங்களே.)

இதுவும் சரிப்பட்டு வரலனு திரும்ப கண்டக்டர்ட்ட போயி பணத்த கேக்க போனோம். இந்த தடவ எங்க கூட்டத்துல இருந்த ஒருத்தரு ரொம்ப டென்ஷன் ஆகி கண்டக்டர்-அ அவரோட மொபைல்ல இருந்து மேனேஜருக்கு கால் பண்ணச் சொன்னாரு. ரிங் போக ஆரம்பிச்சதும் இவரு போன்-அ வாங்கி கண்டமேனிக்கு கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிச்சிட்டாரு. மேனேஜர் என்ன சொன்னாருனு தெரியல, இவரு உடனே இது வேலைக்கு ஆகாதுங்க, வாங்க மறுபடியும் ரோட்ட மறிப்போம்னு கூப்பிட்டாரு. (ஆஹா மறுபடியும் முதல்ல இருந்தா!?!?). இந்த தடவ நான் உஷாரா ஓரமாவே நின்னுகிட்டேன்.

ஒரு லாரி வந்துகிட்டு இருக்கு, நாங்க ரோட்ட மறிக்கிறத பாத்ததும் அவன் சைடு வழியா போகலாம்னு பாத்தான். இந்த தடவ நம்ம மக்கள் ரொம்ப உஷாரா அங்கயும் போயி நின்னு வழிய சுத்தமா மறிச்சிட்டாங்க. ஒரு வழியா லாரி நின்னுடுச்சு(சக்ஸஸ் சக்ஸஸ்!!). அப்புறம் லாரி டிரைவர், "உடம்பு சரியில்லனே, சீக்கிரம் போகனும்"னு சொல்றாரு. அதுக்கு நம்மாளு ஒருத்தரு, "அதுக்குதாண்ணே மறிச்சிருக்கோம், நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் போங்க"னு சொல்றாரு (இவ்வளவு ரணகளத்துலயும் எப்படித்தான் டைமிங்கா பேசுறாய்ங்களோ). ரெண்டு நிமிஷம் போயிருக்கும், அப்ப அந்த வழியா பேட்ரோல் கார்ல வந்த போலீஸ்காரர் என்ன விஷயம்னு கேட்டாரு, நாங்களும் சொன்னோம். சரி வாங்க பேசலாம்னு ஓரமா கூட்டிட்டு போனாரு.

அங்க போயிட்டு அவரு, "நீங்க வந்தது SETC பஸ்ல, ஆனா நீங்க சண்ட போட்டுக்கிட்டு இருக்குறது விழுப்புரம் கோட்டம் ஆபிஸ் முன்னாடி..அவங்களால என்ன பண்ண முடியும்"னு கேட்டாரு. அதுக்கு இங்கிட்டு ஒருத்தரு, "கண்டக்டர் இங்க இருந்துதான் எல்லாம் பேசுறாரு, அதான் இங்க கேட்டுகிட்டு இருக்கோம்"னு சொன்னாரு. உடனே போலீஸ்காரர், "சரி வாங்க, பக்கத்துலதான் SETC ஆபிஸ் இருக்கு அங்க போயி பேசலாம்"னு சொல்றாரு. சரி அங்க போகலாம்னு கிளம்பும் போது, இதையெல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்த ஒருத்தரு, "மதுரை போறதுக்கு ஸ்பேர் பஸ் இப்பதான் வந்து ரிப்பேரான பஸ் முன்னால நிக்குது"னு சொல்றாரு. ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா..இப்பவாவது பஸ் வந்ததேனு எல்லாரும் அந்த ஸ்பேர் பஸ்ல ஏறுனோம். ஒரு வழியா எல்லாரும் ஏறுனதும் வண்டியும் கிளம்பிடுச்சி..அப்போ மணி இரவு 1 மணி.

இதோட இந்த பதிவு முடிய போகுதுனு நினைப்பீங்க, அதான் இல்ல, மேல படிங்க (மேல-னா திரும்ப மொதல்ல இருந்தானு பயந்துடாதீங்க..அடுத்த பத்திக்கு போறதுக்குத்தான் அப்படிச் சொன்னேன்)

ஸ்பேர் பஸ்-ஆ வந்த வண்டி, சென்னை - பாண்டிச்சேரி UD வண்டி. அந்த வண்டிய விட இந்த வண்டில சீட் எல்லாம் கொஞ்சம் நல்லா இருந்துச்சு, ஒரே ஒரு சீட்டை தவிர (எனக்கு தெரிஞ்சு). அந்த சீட்டின் சாயும் பகுதி உடைஞ்சுடுச்சுனு நினைக்கிறேன். சாயும் பகுதியை கயித்தால லக்கேஜ் ட்ரேயோட கட்டி இருந்துச்சு. வண்டி கிளம்பி போயிகிட்டு இருக்கு. வண்டி போகும்போது, படகு கடல்-ல போகும் போது எப்படி மேலயும் கீழயும் போகுமோ அது மாதிரி இருந்துச்சு (ஓ இதனாலதான் இத ஏர்பஸ்னு சொல்றாய்ங்களா). எப்படி இருந்தா என்ன மதுரைக்கு கொண்டு போயிச் சேத்தா போதும்னு ஆச்சு.. ஆனா வண்டி போற வேகத்த பாத்தா அடுத்த நாள் மதியம்தான் போகும்னு தோணுது.

சரி தூங்கலாம்னு பாத்தா, திடீர்னு நல்லா மழை பெய்ய ஆரம்பிக்குது. எல்லாரும் ஜன்னல மூடுறாங்க. சில ஜன்னலலாம் மூட முடியல. சில இடத்துல ஜன்னல மூடினாலும் தண்ணி மேல இருந்து ஒழுகுது. சரிதான் இன்னைக்கு நம்ம தூக்கம் அவ்வளவுதானு நினைச்சி, மழை எப்படி பெய்யுதுனு டிரைவர் கண்ணாடி வழியா பாத்தா அப்பதான் தெரியுது வைப்பரே இல்லனு (ஆஹா நம்ம மதுரை போன மாதிரிதான்). டிரைவர் குத்துமதிப்பா வண்டி ஓட்டிட்டு போறாரு. மழை ரொம்ப பெரிசா பெய்ய ஆரம்பிச்சதும், அவருக்கு எதுவுமே அந்த கண்ணாடி வழியா பாக்க முடியலனதும் வண்டிய ஓரம் கட்டுனாரு. அப்பதான் தோணிச்சு, அந்த 3X2 வண்டிலயே போயிருக்கலாமோனு..

நல்ல வேளை, அஞ்சு நிமிஷத்துல மழை குறைய ஆரம்பிச்சுச்சு. மழை குறைய ஆரம்பிச்சதும் டிரைவர் வண்டிய மெதுவா ஓட்டிகிட்டே போனாரு. அப்புறம் கொஞ்சம் தூரம் போனதும் மழை சுத்தமா இல்ல. அப்பதான் மூச்சே வந்தது. சரினு தூங்க ஆரம்பிச்சேன். வண்டி திருச்சி போனதும் முழிப்பு வந்துச்சு. மணிய பாத்தா, 7.15. பரவாயில்லயே ஆறே கால் மணி நேரத்துல திருச்சி வந்தாச்சு. அதனால மதுரைக்கு 9 மணிக்குள்ள போயிடுவோம்னு நினைச்சேன். ஆனா மதுரை போயிச் சேரும் போது மணி 9.45

சென்னையில இருந்து மதுரை போறதுக்குள்ள ஒரு மனுஷனுக்கு இவ்வளவு கஷ்ட்ங்களா..

இத்தனைக்கும் தனியார் பேருந்துகள் அளவுக்கு இல்லாவிடினும், அரசுப் பேருந்துகளும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றாக கொள்ளையடிக்கின்றன. அந்த பணத்தில் சிறிதேனும் பராமரிப்புக்காக செலவு செய்தால் பயணிகள் இவ்வளவு அவஸ்தைப்பட தேவையில்லை. இதைப் பத்தி அந்த பஸ் டிரைவர்ட்ட கேட்டப்போ, "எங்களால என்னங்க பண்ண முடியும். அதிகாரிங்கதான் ஏதாவது பண்ணனும்..ஒரு நாளைக்கு இவ்வளவு கலெக்க்ஷென் வேணும்னு மட்டும் சொல்றாங்க, ஆனா பஸ்ஸ நல்லா வச்சுக்க எதுவும் பண்ண மாட்டேங்குறாங்க"னு நம்மட்ட புலம்புறாரு.

டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு அறிவிச்ச அன்னிக்கு, நம்ம 'குடிமகன்'க்கு எந்த கஷ்டமும் வந்துடக்கூடாதுனு போர்க்கால நடவடிக்கைலாம் எடுத்து கடைய திறந்து வச்சாங்க. ஏன்னா அரசாங்கத்துக்கு வர்ற வருமானம் குறைஞ்சிடுமேனு. ஆனா அதே அரசு இந்த மாதிரி விஷயங்கள்லயும் ஏதாவது செஞ்சா நல்லா இருக்கும். இதுவரை செய்யாததை பார்க்கும் போது எங்கோ படித்தது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அது வேறொன்றுமில்லை, தமிழகத்திற்கு பல நல்ல ரயில் போக்குவரத்து திட்டங்கள் வராததற்க்கும் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப் படாததற்க்கும் காரணம் பெரும்பாலான தனியார் பேருந்துகள் தமிழக அரசியல்வாதிகளின் பினாமிகளுடையதாம்..என்னத்தச் சொல்ல!!!




Thursday, August 5, 2010



ரஜினியும் அமிதாப்பும்

எனக்கு பார்வர்ட் மெயிலில் வந்ததை இங்கு தமிழாக்கி தந்திருக்கிறேன். இந்த மெயில் சில வருடங்களுக்கு முன்பே வந்திருந்தாலும் எந்திரன் வெளியாகும் சமயத்தில் இதைப் பற்றி எழுதுவது இன்னும் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.


ரஜினி நீண்ட காலமாக அமிதாப்பிடம், "அமிதாப்ஜி, இந்த உலகத்துல எனக்கு எல்லாரையும் தெரியும். யார யார வேணாலும் சொல்லுங்க, அவுங்கள எனக்குத் தெரியும்" என்று சொல்லி நச்சரிக்கிறார். ரஜினியின் நச்சரிப்பைத் தாங்காமல் ஒரு நாள், "ரஜினி, உங்களுக்கு டாம் க்ருஸ் தெரியுமா?" என்று கேட்கிறார்.

அதற்கு ரஜினி, "கண்ணா, நானும் டாம்-வும் ரொம்ப நாள் ப்ரெண்ட்ஸ். ஜுஜூபி அத இப்பவே காட்டுறேன்" என்று சொல்லி இருவரும் அமெரிக்காவில் இருக்கும் டாம் க்ரூஸ் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு டாம் க்ரூஸ் ரஜினியை பார்த்ததும், "ஆ தலைவா, என்ன இந்த பக்கம்" என்று கேட்டுவிட்டு இருவரையும் மதிய உணவை அங்கேயே சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறார்.

அமிதாப்பிற்கு இது நம்பும்படியாக இருந்தாலும் ரஜினிக்கு டாம்-ஐ தெரிந்தது அதிர்ஷ்டவசமானது என்று நினைக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட ரஜினி வேறு யாருடைய பெயரையாவது சொல்லச் சொல்கிறார். அமிதாப் உடனே, "அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா?" என்று கேட்கிறார். ரஜினியும், "தெரியுமே" என்று சொல்லி அமிதாப்பை வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்கிறார்.

வெள்ளை மாளிகையில் ரஜினியைப் பார்த்த ஒபாமா, "ஹேய் ரஜினி, என்ன ஆச்சர்யம்!! இப்பத்தான் ஒரு மீட்டிங்குக்கு கிளம்பிகிட்டு இருந்தேன். நீங்களும் உங்க ப்ரெண்டும் வர்றீங்க..சரி நாம மொதல காபி சாப்பிட போலாம், மீட்டிங்க நான் அப்புறம் பாத்துக்குறேன்" என்று சொல்லி காபி சாப்பிட அழைத்துச் செல்கிறார், இதைக் கேட்ட அமிதாப்பிற்கு பேரதிர்ச்சி, இருந்தாலும் அவரது சந்தேகம் இன்னும் தீரவில்லை. ரஜினி வேறொரு பெயரைச் சொல்லச் சொல்கிறார்.

இம்முறை அமிதாப், "போப்-ஐ தெரியுமா?" என்று கேட்கிறார். இருவரும் உடனே வாடிகனில் போப் இருக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த ரஜினி, "இவ்வளவு கூட்டத்துல போப் என்னை கண்டுபிடிக்க முடியாது. எனக்கு இங்க உள்ள செக்யூரிட்டிஸ்லாம் தெரியும். அதனால நான் உள்ள போயி போப்போட பால்கனில வந்து நிக்குறேன்" என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

சுமார் அரை மணிநேரம் கழித்து, ரஜினி போப் உடன் பால்கனியில் வந்து நிற்கிறார். இந்நேரம் பார்த்து அமிதாப்பிற்கு நெஞ்சு வலி. அங்கிருக்கும் டாக்டர்கள் உடனே அமிதாப் இருக்குமிடத்திற்கு விரைகின்றன்ர். ரஜினியும் அங்கு வந்து, "அமிதாப், என்னாச்சு திடீர்னு??" என்று கேட்கிறார். அதற்கு அமிதாப், "நீங்களும் போப்-ம் வர வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் வந்தத பாத்ததும் பக்கத்துல இருந்த ஒரு இத்தாலியன் ஒன்னு கேட்டான்".
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஆமா ரஜினி பக்கத்துல ஒருத்தர் நிக்கிறாரே, யாரு அவரு???




Wednesday, August 4, 2010



எந்திரன் - பாடல்கள் விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த எந்திரன் படப் பாடல்கள் கடந்த சனிக்கிழமையன்று வெளியாகியது. அன்றே இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து பாடல்களை கேட்டுவிட்டேன். பொதுவாக ரகுமான் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும் என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால் இப்படத்தில் பெரும்பாலான பாடல்கள் முதல் தடவையே பிடித்துவிட்டது.


இதோ எனது பார்வையில் எந்திரன் பாடல்கள்.

புதிய மனிதா - S.P. பாலசுப்ரமணியம், A.R. ரகுமான், கதீஜா ரகுமான்

இசைத் தகடில் முதல் பாடல், படத்திலும் இதுவே முதல் பாடலாக இருக்குமென்று நினைக்கிறேன். ரகுமான் குரலில் மெதுவாக ஆரம்பிக்கும் பாடல்,எஸ்பிபி பாட ஆரம்பித்தும் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. பின்னணி இசையும் மிகவும் துள்ளலாக அமைந்திருக்கிறது. வைரமுத்துவின் வரிகளும் அருமை, எடுத்துக்காட்டாக "கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும், அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை". ரஜினி - எஸ்பிபி ஹிட் பாடல் வரிசையில் இந்த பாடலுக்கும் ஒரு இடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

காதல் அணுக்கள் - விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்

முதல் தடவை கேட்கும் போது பிடிக்கவில்லையென்றாலும், கேட்க கேட்க பிடிக்க ஆரம்பத்து விட்டது. இதன் பாடலசிரியரும் வைரமுத்துவே. இடையிடையே வரும் பின்னணி இசை சில ரகுமானுடைய பழைய பாடல்களை நினைவு படுத்தினாலும் மொத்தத்தில் ரசிக்க முடிகிறது.

இரும்பிலே ஒரு இருதயம் - A.R ரகுமான், காஷ் '' கிரிஸ்ஸி

துள்ளலான மேற்கத்திய இசையுடன் ஆரம்பிக்கிறது பாடல். பின் எந்திரனின் காதலைப் பற்றி ரகுமான் பாடுகிறார். பெண் குரல் வித்தியாசமான ஆனால் பாடலுக்கேற்ற குரல். பாடல் கடைசியில் பெண் குரலில் பாடும் போது வரும் மெட்டு ஏதோ ஆங்கில பாடலை நினைவு படுத்துவது போலுள்ளது. வைரமுத்துவின் மகன் கார்கி இப்பாடலை எழுதியுள்ளார்.

சிட்டி டான்ஸ் ஷோகேஸ் - பிரதீப் விஜய், பிரவின் மணி, யோகி பி

மேற்கத்திய இசையும் இந்திய இசையும் கலந்த பாடல். பாடல் தலைப்பை கேட்டால் எந்திர மனிதனின் ஆடலுக்கேற்ற பாடல் போலுள்ளது. ஆனால் பாடலில் வரும் இசை படத்தின் டைட்டிலின் போது வரும் இசை போலிருக்கிறது. படம் வெளிவரும்போதுதான் தெரியும் எதற்கான பாடலென்று.

அரிமா அரிமா - ஹரிஹரன், சாதனா சர்க்கம், பென்னி தயாள், நரேஷ் ஐயர்

இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். எந்திர மனிதனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையேயான டூயட் பாடல். அரசர்கள் நடக்கும் போது வரும் பின்னணி இசை போலுள்ள பாடல் ஆரம்ப இசை அருமை. அதுதான் இப்போது எனது மொபைலின் ரிங்டோன். ஹரிஹரன் தனது குரலை மாற்றிப் பாடியிருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாடகர் பாடிய பாடல் என்பதால் என்னவோ, மேலும் மேலும் கேட்க கேட்கத் தூண்டுகிறது :) இதன் பாடலாசிரியரும் வைரமுத்துவே.

கிளிமஞ்சாரோ கிளிமஞ்சாரோ - ஜாவித் அலி, சின்மயி

பழங்குடிகளின் இசையில் வரும் துள்ளலான பாடல். பாடல் அருமையாக இருக்கிறது ஆனால் எங்கோ கேட்டது போன்ற உணர்வு வருகிறது. பா.விஜய் இப்பாடலை எழுதியிருக்கிறார்.

பூம் பூம் ரோபோடா - யோகி பி, கீர்த்தி சகதியா, ஸ்வேதா மோகன், தன்வி ஷா

இதுவும் எந்திர மனிதனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையேயான டூயட் பாடல். இப்பாடலும் கேட்டவுடன் பிடித்து விடுகிறது. ஆனால் ஒரு இடத்தில் யோகி பி பாடும் வரிகள் அவரின் முந்தைய பாடல்களில் வருவது போன்றே உள்ளது. இப்பாடலை எழுதியவர் கார்கி.

********************

மொத்தத்தில் எந்திரன் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை என்றே நினைக்கிறேன்.